கவலையளிக்கிறது பிரதமரின் கருத்து திசைமாறிச் செல்கிறது!

காணாமல்போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தானது அவர்களின் உறவினர்களை மனங்களைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“போர் முடிவடைந்து ஏழு வருடங்களாகியுள்ளன. ஆனால், காணாமல்போனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், காணாமல்போனோர் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது வேறு எங்காவது போயிருக்கலாம் என்று பிரதமர் கூறியிருப்பது அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

நல்லாட்சி அரசு திசைமாறிச் செல்கின்றது. தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளதுளது. குமாரபுரம் படுகொலை வழக்குத் தீர்ப்பு, ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பு உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட 686 பேர் காணாமல்போயுள்ளனர். இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் தமது கணவன்மார், பிள்ளைகளை ஒப்படைத்தமைக்கான சாட்சியங்கள் உள்ளன. காணாமல்போனோர் விடயத்துக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு வாக்களித்திருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்கள் முடிந்தளவு விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டுள்ளனர். எனினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு வலிகள் புரியாது. எனவேதான் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. எனினும், உள்நாட்டில் விசாரணை நடத்துவோம், இதற்காக காணாமல்போனோர் அலுவலகமொன்றை அமைப்போம் என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்னமும் ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கின்றார். அரசு தவறான பாதையில் பயணிக்கின்றது. காணாமல் போனவர்களின் விவகாரத்துக்கு நியாயம் கோரி உண்ணாவிரதம் இருப்பவர்களின் உயிர்களையும் பறிப்பதற்காக அரசு விரும்புகின்றது” – என்றார்.