காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நியாயமான முடிவை விரைவில் வழங்குங்கள் – சம்பந்தன் .

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நியாயமான முடிவுகளை விரைவில் வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால், யாழ்.மாவட்ட செயலகத்தில் வடபிராந்தியத்திற்கான கொன்சலர் அலுவலகம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமைகளை அடைய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளோம்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். உண்மையான புரிந்துணர்வு ஏற்பட்டால் மாத்திரமே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு, சமாதானத்தை அடைந்து சமத்துவத்த்தையும் அடைய முடியும்.
இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்களை சமீப காலமாகக் கூறி வருகின்றோம்.

அந்தவகையில், 2017 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் எமது அதிகாரங்கள் பகிரப்பட்டு, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள், பெரும்பான்மையின மக்கள் அனைவரும் தற்போது நிலமைகளை புரிந்துகொண்டுள்ளார்கள். நாட்டில் உள்ள முற்போக்கு சிந்தனை உடையவர்களும் நாட்டின் சுபீட்சத்தினையும் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால், இந்த நாட்டின் அபிவிருத்தியும், வளர்ச்சியையும் தவிர்க்க முடியாது.

தாமதமின்றி எமது செயற்பாடுகள் நடைபெற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த உறவுகளுக்கு விரைவில் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென அறிய முனையும் உறவுகளுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்பார்க்கும் நியாயத்தை மறுக்காது அவர்களின் நியாயத்துக்கான முடிவுகளை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.