படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம் பாராமல் நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம் பாராமல் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

கிரான், செங்கலடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரடியாக சென்று பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக படுவான்கரை பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

படுவான்கரை பிரதேசத்தில் உள்ளவர்கள் விவசாய நடவடிக்கைகளையும் சிறு விவசாயம் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கைகளையும் அதிகளவில் மேற்கொண்டுவருபவர்கள்.

இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட குறித்த பிரதேச மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மழை காரணமாகவும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் அன்றாடம் கூலித்தொழில்களைச்செய்து அன்றாடம் தமது வாழ்க்கையினை கொண்டு செல்பவர்களும் அதிகளவில் உள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியான மழை காரணமாக அவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டு பெரும் கஸ்ட நிலையில் உள்ளனர்.

எனவே நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, படுவான்கரை பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரணம் வழங்குமாறு கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.