புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் நிலையம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினதும் தடையை நீக்கவேண்டும்.

புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். அவர்கள் எங்களுடைய அபிவிருத்தி, முதலீட்டு உள்ளிட்ட விடயங்களில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

எனினும், அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகள் மீதுகொண்டுள்ள சில கருத்துக்கள் அவர்களை நாட்டுக்குள் வருவதை தடுக்கின்றது. எனவே, புலம் பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோருகின்றேன்.

அத்துடன், எங்களுடைய நலனுக்காக வேண்டி அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி அவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் இருந்த தமக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நன்கு அறிந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புலம் பெயர் அமைப்புகளை பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர், அவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என மேலும் கூறியுள்ளார்.