timthumb

கனடா விஜயம் தொடர்பாக அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டது – சீ.வி.விக்னேஸ்வரன்

கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கான விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகணசபை எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலளித்துள்ளார்.

வடமாகணசபையின் 83 ஆம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ரன், மார்க்கம் நகரங்களுக்கும் முறையே முல்லைத்தீவு, வவுனியா நகரங்களுக்கிடையிலும் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் இந்த உடன்படிக்கை குறித்து அமைச்சரவைக்கு கூறப்பட்டதா? வரைபின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டதா? இந்த ஒப்பந்தத்தின் வரைபு மாகாண சபைக்கு வழங்கப்படுமா? முல்லைத்தீவு மாவட்ட செயலர், வவுனியா நகரசபை தலைவர் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்டதா? என முதலமைச்சரை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், 27.12.2016 ஆம் திகதி மாகாண அமைச்சரவைக்கு கூறப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் வரைபு அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தின் வரைபு பொருத்தமான சந்தர்ப்பத்தில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும், மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா நகரசபை தலைவர் ஆகியோரின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்துள்ளார்.