வட்டக்கண்டல் படுகொலைக்கான நீதிக்காக காத்திருந்து 32 வருடங்கள் கடந்து விட்டன: வடமாகாண முதலமைச்சர்

போர்க்குற்ற விசாரணை உரிய முறையில், சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே வட்டக்கண்டல் படுகொலையில் தமது உறவுகளை இழந்த எமது சகோதர சகோதரிகளின் மனதைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்தக்கூடிய காரியம் என வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டின் நினைவு கூரும் நிகழ்வு வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று திங்கட்கிழமை(30) காலை இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சோகமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளேன். இதன் தாற்பரியத்தை எதிர்க்கட்சித் தலைவர் கூறியதும் தேகசுகம் மறந்து, பயணத்தூரம் மறந்து இங்கு வந்துள்ளேன்.

30.01.1985 அன்று 32 வருடங்களுக்கு முன்னர் இங்கு உயிர் நீத்த சகலரின் ஆத்மாக்களும் சாந்தி அடைவதாக என்று பிரார்த்தித்துக் கொண்டு என் பேச்சைத் தொடங்குகின்றேன்.

இலங்கை அரச படைகளை நோக்கி இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளனர். இரக்கமின்றிச் சுட்டுக் கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்று வந்துள்ளனர்.

அதனால் தான் எமது வடமாகாணசபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 10.02.2015ல் இயற்ற வேண்டி வந்தது.

இங்கினியாகல என்ற இடத்திலேயே ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வந்த உடனேயே 1956ம் ஆண்டு ஜூன் 5ந் திகதி தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடங்கியது.

பின்னர் 1958ம் ஆண்டின் கலவரங்கள் எமது மக்களை தமது சகல உடைமைகளையும் துறந்து தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி ஓடச் செய்தது.

இன்றும் அவர்கள் விட்டு வந்த காணிகள் பல அவர்கள் பெயரிலேயே இருக்கின்றன. நீண்ட கால ஆட்சி உரித்து உறுதிகள் எழுதி வெளியார்கள் அவற்றை இன்று ஆண்டு அனுபவித்து வருகின்றார்கள்.

அதன் பின்னர் 1961ல் கலவரங்கள் நடந்து 1974ம் ஆண்டில் ஜனவரி 10ந் திகதியன்று தமிழராட்சி மகாநாட்டில் மனிதப் படுகொலை நடைபெற்றது. 1977இலும் 1981இலும் இனக்கலவரங்கள் மனித உயிர்களைப் பறித்தன. 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 1ந் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

1983ல் நடந்த இனக்கலவரம் எம் மக்கள் பலரை சகலதையும் இழந்து கடல்கடந்து செல்ல வைத்தது. தெற்கில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்கள் பலர் கடல் கடந்து வாழ்கின்றார்கள். தெற்கின் குடிப்பரம்பல் அவ்வாறு வெளியேறிய தமிழ் மக்களின் பெயர்களை மறைத்தே இன்று கணிக்கப்படுகின்றன.

தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு காணிகள் வைத்து வியாபாரங்களை நடாத்தி, அரச சேவைகளில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது இன்று மறந்து போன விடயமாகிவிட்டது.

நானறிய திஸ்ஸமகாராமாவின் அரைவாசி நெற்காணிகள் தமிழ்ச் சகோதரர்கள் இருவரின் பெயர்களில் இருந்தன. அவர்களின் உறவினர் ஒருவர் இன்று ஆந்தரப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

1983ல்த் தான் திருநெல்வேலி படுகொலை நடந்தது. பின்னர் 1984ம் ஆண்டில் சாம்பல்த் தோட்டப் படுகொலையும், சுண்ணாகம் படுகொலையும், மதவாச்சி இரம்பாவைப் படுகொலையும், திக்கம் பருத்தித்துறைப் படுகொலையும், ஒதியமலைப் படுகொலையும், குமுழமுனைப் படுகொலையும், செட்டிக்குளம் படுகொலையும், மணலாறு படுகொலையும், மன்னார் படுகொலையும், கொக்கிளாய் கொக்குத் தொடுவாய் படுகொலையும் நடந்தேறின.