தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர எவராலும் மக்களுக்கு நீடித்து நிலைக்க கூடிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர வேறு எவராலும் அதிகாரப் பரவலாக்களில் உறுதியாக இருந்து தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைக்க கூடிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்ல கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 25வது ஆண்டை பூர்த்திசெய்வதை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் எஸ்.தேவசிங்கன் தலைமையில் உயர்பெறுபேற்றுக்கான கௌரவிப்பு விழா நேற்று(30) சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விச்செயற்பாடுகளை நோக்காக கொண்டு 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம் கல்விப்பணியில் மட்டு மன்றி சமூகப்பணியையும் மேற்கொண்டுவருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கட்சி பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு நன்மை செய்தவர்களை நாங்கள் மறந்து விட முடியாது.

கே.டபிள்யு.தேவநாயகம், நல்லையா போன்ற அரசியல்வாதிகள் செய்த சேவையினை நாங்கள் மறக்கமுடியாது. கல்விக்காக அரும்பணியாற்றியுள்ளனர்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் இந்த மாவட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்தவர்களை நாங்கள் மறக்கமுடியாது.

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பிரமாண்டமான வாசிக சாலையினை மட்டக்களப்பில் கட்டுவதற்கான பணியை ஆரம்பித்தார். அது குறையில் நிற்கின்றது.

அது தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தேன். அதனை பூர்த்தி செய்வதற்கு 167 மில்லியன் ரூபா தேவையாகவுள்ளது.

தனியான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் இந்திய தூதரகத்திற்கும் வழங்கினேன்.தொடர் வேலைகளுக்கு பணம் வழங்குவதில்லையென்ற பதிலையே தந்துள்ளனர்.

அதன் பின்னரே கிழக்கு மாகாணசபையில் தனிநபர் பிரேரணையாக அதனை கொண்டுவந்தேன்.ஒரு வருடமோ இரண்டு வருடத்திலாவது அதனை பூர்த்திசெய்யுமாறு கோரியுள்ளேன்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் நல்ல விடயங்களை செய்தவர்களை பாராட்டவேண்டும். கட்சி என்பதும் அரசியல் என்பதும் தேர்தல் காலங்களில் மட்டுமே.

நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறிவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்பதே எனது கொள்கை. தனிப்பட்ட விடயங்களுக்கு அரசியலை பயன்படுத்தமுடியாது.

கடந்த காலத்தில் நாங்கள் பல போராட்டங்களை நடாத்தி இன்று இராஜதந்திர ரீதியில் போராடிவருகின்றோம். எங்களது பகுதி தனித்துவம் காக்கப்பட்டு அபிவிருத்திசெய்யப்படவேண்டும், எமது மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கப்பெறவேண்டும்.

வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு பூரண அதிகார பரவலாக்களுடன் ஒரு சுயாட்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதன் ஊடாக எமது காணிகள் வரையறை செய்யப்படவேண்டும். எங்களது பாதுகாப்பினை நாங்களே உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் எங்களுக்கு கிடைக்கப்பெறவேண்டும்.

இன்று கஷ்டப்பிரதேசங்களில் பல்வேறு ஆசிரிய பிரச்சினைகள் உள்ளது.15,20 வருடங்களாக கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களை காணாத பாடசாலைகளும் உள்ளன. சில தேசிய பாடசாலைகளில் ஆசிரிய வளம் நிரம்பிக்காணப்படுகின்றன.

கல்வி அதிகாரங்கள் மாகாணசபைக்கு உட்பட்டு இருந்தாலும் மத்திய அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகள் கையாளப்படுகின்றன. அதேபோன்று மாகாண பாடசாலைகளுக்கான நிதியொதுக்கீடுகளும் இல்லாத நிலையிலேயே தற்போது இருக்கின்றது. மத்திய அரசாங்கதினால் இதற்கான நிதியொதுக்கீடுகள் மாகாணசபைகள் ஊடாக செய்யப்படுகின்றன.

இந்த அதிகாரங்கள் எல்லாம் பரலாக்கப்படவேண்டும். காணி அதிகாரங்கள் எங்களுக்கு முழுமையாக பெறப்படவேண்டும். அப்போதுதான் எமது பிரதேசத்தினை நாங்கள் அபிவிருத்திசெய்யமுடியும்.

வைத்தியசாலைகளுக்கு வைத்தியரை நியமிக்க முடியாத நிலையில் மாகாண அதிகாரங்கள் உள்ளது.அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படும்போதே நாங்கள் அபிவிருத்திகளை செய்யமுடியும்.

மேலும், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தவிர வேறு எவராலும் அதிகாரப்பரவலாக்களில் உறுதியாக இருந்து தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைக்க கூடிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.