காணி விடுவிப்புத் தொடர்பான முறைப்பாடு விரைவில் ஜனாதிபதியிடம் – சி. சிவமோகன்

முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவிக்க இருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

இன்று கேப்பாபுலவு மக்களின் மூன்றாவது நாள் போராட்டத்தை தொடரும் விமானப்படை முகாம் அருகில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திய போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கேப்பாப்புளவு பகுதியில் பொதுமக்களின் காணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இராணுவமும், அரச அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை எடுத்த போதும் இராணுவத்தினர் பொதுமக்களுடைய காணிகளை இன்னமும் விடுவிக்கவில்லை.

அவர்கள் கையளித்திருந்தால் இவ்வாறானதொரு போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஜனாதிபதியின் பணிப்பை இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தவில்லை.

விமானப்படையினர் இன்னும் கால அவகாசம் கேட்பது அனைத்தையும் குழப்பும் நடவடிக்கையாகும். அத்துடன் மாவட்டச் செயலாளர் எனக்கு ஒன்றும் தெரியாது என கைவிரிப்பது ஏற்றுக் கொள்ள கூடியதும் அல்ல.

விடுவிப்பதாக கூறிய 148 ஏக்கர் காணிகளை எமக்கு 24 மணிநேரத்திற்குள் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து இராணுவம் கூறும் காரணங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவிக்க இருக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.