உதவித் திட்டங்கள் தொடர்ந்து எமக்குக் கிடைத்து வருவன என்று எதிர்பார்க்காதீர்கள்- சி.வி.விக்னேஸ்வரன்.

எமது உணவுப் பழக்கவழக்கங்களில் நாம் முறையான வரன்முறைகளைத் தற்காலத்தில் பின் பற்றாத காரணத்தினால் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கும் இன்னோரன்ன உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வருகின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பாரம்பரிய உணவுகள் நிலையத்தை திறந்து வைத்த பின் உiராற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வவுனியாவின் பல பகுதிகளிலும் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பல்வேறு நிலையங்கள், பூங்காக்கள், காரியாலயக் கட்டடம், தியான மண்டபம் ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

இறுதியாக நெல்சிப் திட்ட அனுசரணையுடன் உலக வங்கியால் உங்கள் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரம்பரிய உணவு நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றுவதில் மகிழ் வடைகின்றேன்.

எமது உணவுப் பழக்கவழக்கங்களில் நாம் முறையான வரன்முறைகளைத் தற்காலத்தில் பின் பற்றாத காரணத்தினால் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கும் இன்னோரன்ன உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வருகின்றோம்.
எம்முட் பலர் தேக ஆரோக்கியம் குன்றியவர்களாகக் காணப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் எமது வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் எமது பாரம்பரிய உணவு
முறைகளையும் உணவுகளையும் பல இடங்களிலும் அறிமுகம் செய்து அம்முயற்சியில் பெருவெற்றியும் அடைந்துள்ளார்.

அதற்கும் மேலாக ஆங்காங்கே ‘அம்மாச்சி’ என்ற பெயரில் உணவு நிலையங்களை அமைத்து தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை மிகவும் சுத்தமாகவும் குறைந்த விலையிலும் அறிமுகம் செய்து வருவது மட்டுமன்றி சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவுகளை அறிமுகம் செய்தும் வைத்துள்ளார்.

மாங்குளம் ரெஸ்ட் என்ற பெயரில் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் உருவாக்கப்பட்ட உணவு விடுதி மிகச் சுகாதாரமாக இயற்கை வனப்புடன் சோலைகளுக்கு நடுவே உருவாக்கப்பட்டுள்ளது.

மரத்தளபாடங்கள் எதுவும் பயன்படுத்தப்படாது முற்று முழுதும் சீமேந்து மேடைகளும், சீமேந்து கற்களும் உபயோகிக்கப்பட்டு மிக்க எழில் கொஞ்சும் ஓர் அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டிருப்பது அந்த மாதர் சங்கத்தின் சிந்தனைச் சிறப்பை எடுத்துக்காட்டுவன.

பட்டினங்களில் வளர்ந்த எம்மவர்கள் பலர் பொதுவாக உணவுக்கு எங்கு சென்றாலும் சீமேந்து சூளைகளுக்கு நடுவே அல்லது பிளாஸ்டிக் இருக்கைகளில் அமர்ந்திருந்து மேலைநாட்டு உணவுகளை மிகப்பெரிய செலவில் ருசித்துவிட்டு எழுந்து செல்வோம்.

ஆனால் கிராம மக்கள் தமது பயணத்தின் போது சிறப்பான மரநிழல் ஒன்றைக் கண்டுவிட்டால் அதன்கீழ் அமர்ந்திருந்து தமது உணவுப் பொட்டலங்களை அல்லது பாத்திரங்களை திறந்து உணவு அருந்தி வேண்டிய ஓய்வெடுத்துச் செல்வர். உணவுப் பழக்கவழக்கங்களில் இனி நாம் சுகாதாரத்துடன் இணைந்த எளிமையான உணவுப் பழக்கவழக்கங்களுக்கு எம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இன்று வடமாகாண சபையின் நெல்சிப் திட்டத்தின் கீழ் 2.93 மில்லியன் ரூபா செலவில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற இந்த பாரம்பரிய உணவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எம் எல்லோர் கடமையாகும்.

உதவித் திட்டங்கள் தொடர்ந்து எமக்குக் கிடைத்து வருவன என்று எதிர்பார்க்காதீர்கள். பாரிய செலவில் கட்டப்படும் எமது செயற்திட்டங்களை சும்மா கிடைத்ததாக எண்ணிவிடாதீர்கள்.

உலக வங்கி இலகு கடன் அடிப்படையில்த்தான் நிதியைத் தருகின்றது. அந்நிதியில் நாம் உருவாக்கும் செயற்திட்டங்கள் எமது பொக்கிஷங்களே. அவற்றை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த, பேணிப் பாதுகாக்க, நடாத்த, நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்த நிலையம் திறந்து வைக்கப்படும் போது எவ்வாறு அழகுற சுத்தமாக அமைந்திருக்கின்றதோ அதே சுத்தம் அழகு என்பன தொடர்ந்தும் பேணப்படுவதுடன் நல்ல உணவு வகைகளை வழங்குவதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.