22

தயாசிறி ஜயசேகர – எமது முதலமைச்சர் பற்றியோ, எங்களைப் பற்றியோ பேசுவதற்கு தகுதியற்றவர் -சிவசக்தி ஆனந்தன்

கொள்கை இல்லாமல் கட்சி மாறும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஒரு கொள்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் எமது முதலமைச்சர் பற்றியோ, எங்களைப் பற்றியோ பேசுவதற்கு தகுதியற்றவர் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலக்கட்டத்தில் நாம் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இந்த இரண்டு வருடத்தில் சாதாரண பிரச்சினையில் இருந்து எமது அரசியல் பிரச்சினை கூட தீர்க்கப்படாத நெருக்கடியான நிலையில் தான் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.

காணாமல் போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கேப்பாப்புலவு மக்கள் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவ்விடயம் தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.

இதற்கு அப்பால் இலங்கை அரசாங்கமும் ஐ.நா மனித உரிமை பேரவையும் இணை அணுசரணையாக ஏற்றுக் கொண்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாத நிலைமைகள் இருக்கின்றன.

நாங்கள் மக்களிடம் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்காக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ஆனால் இந்த அரசாங்கம் எங்கள் எல்லோரையும் ஏமாற்றுவதுடன் மட்டுமல்லாமல் வரவிருக்கும் ஐ.நா கூட்டத் தொடரில் காலத்தை இழுத்தடிப்பு செய்ய பல தந்திரங்களை செய்து வருகின்றது.

இந்த விடயங்களைப் பேசுகின்ற எங்களுடைய முதலமைச்சரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கல்லால் எறிவது போன்று நேற்றைய தினம் தயாசிறி என்ற அமைச்சர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் மக்களிடம் கேட்ட விடயங்களைத் தான் நடைமுறைப்படுத்துமாறு முதலமைச்சர் கேட்கின்றார்.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஒரு தடவை ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஒரு தடவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் ஒரு கொள்கை இல்லாமல் கட்சி விட்டு கட்சி மாறியவர்.

கொள்கை இல்லாமல் கட்சி மாறிக் கொண்டிருப்பவர்கள் ஒரு இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீண்டகாலமாக எமது உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய முதலமைச்சரையோ அல்லது எங்களையோ கேள்வி கேட்பதற்கு தகுதியற்றவர்.

இலங்கை அரசாங்கமும், ஐ.நா சபையும் இணை அணுசரனையாளராக ஏற்றுக் கொண்ட உள்ளகப் பொறிமுறை குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

தற்போது வடமாகாண முதலமைச்சரிடமும் கேட்டுள்ளேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கையெழுத்திட்டு ஐ.நா பொதுச்சபைக்கு கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

வடமாகாண சபையில் இது தொடர்பில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம்தான் எங்களுடைய மக்களுக்கு ஒரு தீர்வைப் பெறமுடியும்.

எங்களது எதிர்கட்சித் தலைவருக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. ஐ.நாவுடன் இணக்கத்திற்கு வந்த விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கும், ஐ.நாவில் கால நீடிப்புக்களை செய்யாமல் இருப்பதற்கும் கடுமையான அழுத்தங்களை எதிர்கட்சித் தலைவரும் கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.