வடக்கில் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அறிவிப்பு

வடக்கில் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்குச் சவால் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச சட்ட வல்லுனர்கள் கொண்ட கலப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கையாகும்.

பல்வேறு நாடுகளுக்கான விஜயங்களின் போதும் அவர் இதனை வலியுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறை ஊடாக போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைக் கண்டிக்கும் வகையில் வடக்கில் சர்வதேச சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையொன்றை உருவாக்கப் போவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்துக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது மாத்திரமன்றி, மாகாண சபைகளின் அதிகாரங்களை மீறிய செயற்பாடாகவும் கணிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.