வட பிராந்திய இ.போ.சபைக்கென நிரந்தர பிராந்திய முகாமையாளர் முறைப்படி நியமிக்கப்படுவார் – மாவை.சோ.சேனாதிராஜா

வட பிராந்திய இ.போ.சபைக்கென நிரந்தர பிராந்திய முகாமையாளர் முறைப்படி நியமிக்கப்படுவார் எனவும் இ.போ.சாவினரும் ஒத்துழைக்கவில்லை உன்றே போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடீசில்வா தெரிவித்ததாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

வட பிராந்திய இ.போ.சபையினர் இன்று நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர் இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

இ.போ.சபையின் ஊழியர்கள் பலர் வந்து என்னைச் சந்தித்து ஓர் மனுவைக் கையளித்தனர். எனவே அது தொடர்பில் உரையாட உடனடியாகவே மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடீ சில்வாவுடன் தொடர்பு கொண்டேன்.அதன் போது ஊழியர்கள் முன்வைத்த முக்கியகோரிக்கைகள் தொடர்பில் உரையாடினேன்.

அதன் பிரகாரம் வட பிராந்திய இ.போ.சபைக்கென நிரந்தர பிராந்திய முகாமையாளர் ஒருவரை நியமிக்கப் போதிய தகுதியுடன் வட மாகாணத்தில் பணியாளர்கள் இல்லை என்றே முதலில் தெரிவித்தார். ஆனால் அதற்குத் தகுதியானவர்கள் இங்கு இருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர் என உடனடியாகவே என்னால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து இதற்காக முறைப்படி நேர்முகத் தேர்வு இடல்பெற்று தகுதியானவர் விரைவில் நியமிக்கப்படுவார் என வாக்குறுதியளித்தார். அதேபோன்று அவர்களின் பணிப்புறக்கனிப்பு விடயத்திற்கும் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இ.போ.சாவினரும் ஒத்துழைப்பு இன்றியே செயல்படுவதாகவும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

அது மட்டுமன்றி இ.போ.சாவிற்காக அதிக நிதி ஒதுக்கப்படுகின்றபோதும் அவர்கள் ஒத்துழைப்பின்றிச் செயல்படுவதாக சுட்டிக்காட்டினார். இருப்பினும் மாகாண சபையுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி விரைவிரல் ஓர் தீர்வினையெட்டி ஊழியர்களின் கோரிக்கைக்கு ஓர் தீர்வினை எட்டும்முகமாக மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதலமைச்சர்களுடனும் பேசி ஓர் தீர்வையெட்ட முயற்சிக்கப்படுகின்றது. என்றார்.