ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்

“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

“அரசமைப்பு உருவாக்கம், காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பு, போர்க்குற்ற விசாரணை ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டால் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் அமைக்க வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குராரதுங்க பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல்போனோர் அலுவலகம், போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் இவை இரண்டும் வெவ்வேறான செயன்முறைக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது. ஒன்றைச் செய்தால் மற்றொன்றைச் செய்ய வேண்டியதில்லை என்பது தவறான கருத்து. ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை அரசு செய்வதாக உறுதியளித்து இணை அனுசரணை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மக்கள் கருத்தறியும் நல்லிணக்கச் செயலணி கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்குப் பரிந்துரைத்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கச் செயலணி மக்களின் கருத்துக்களை கூறுவதற்கே நியமிக்கப்பட்டது என்றும் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது தவறு. செயலணி மக்களின் கருத்துக்களையே பிரதிபலித்துள்ளது. கலப்பு நீதிமன்றத்துக்கான கோரிக்கை தெற்கில் முன்வைக்கப்பட்டது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக்கான கோரிக்கை வடக்கில் முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தமது பரிந்துரையை முன்வைப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்” – என்றார்.