போர்முரசு கொட்டும் சிங்கள தலைவர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர் ?

போர்முரசு கொட்டும் சிங்கள தலைவர்கள் ஏன் கடந்த எட்டு நாளாக போராடும் தமிழ் மக்களுக்காக ஒரு வார்த்தை கூட எழுப்பவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

சொந்த காணிகளைக் கோரி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வரை விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூட அறிவித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் அரசாங்கம் ஒரு பகுதி இரணுவத்தினரை அனுப்பி அங்குள்ள மக்களை இடம்பெயர வைத்துள்ளது.

அவர்கள் சொத்துக்களை இழந்த நிலையில் முகாம்களில் தங்கி மீண்டும் சொந்த குடியிருப்புக்களுக்கு சென்ற பின்னர் இன்று வரை சொந்த நிலங்கள் வழங்கப்படாது உள்ளது.

அது மட்டும் அல்ல, அகதிகளாக உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அவர்களின் அகதி வாழ்வுக்கு முற்றுபுள்ளி வைக்க கூடிய வகையில் அரசாங்கம் மக்களின் சொந்த காணிகளை விடுவிப்பதாக இல்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் இன்று வரையும் 40 வீதமான நிலப்பரப்பை இராணுவத்தினர் வைத்துள்ளனர். இதனை புள்ளிவிபரங்கள் வெளிக்காட்டியுள்ளதாகவும் கூறினார்.

கேப்பாப்புலவு மக்கள் எப்போது சொந்த காணிகளுக்கு செல்வார்கள். அவர்கள் வாழ அரசாங்கத்தினால் எப்போது உரிமை வழங்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.

கடந்த எட்டு நாட்கள் உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். இப்போது நல்லாட்சி இருப்பதாக கூறிக்கொள்வதில் எந்த விதமான நியாயமும் இருப்பதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தொடக்கம் பிரதமர் வரை அனைவரும் சம உரிமை பற்றியும், நல்லாட்சியை பற்றியும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த நாட்டில் உள்ள மக்கள் கூட்டம் சொந்த இடங்களில் குடியேறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, போராடும் மக்கள் சுதந்திரக்காற்றினை எப்பொழுது சுவாசிக்க போகின்றார்கள் என நாட்டு தலைவர்களை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.