ஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும் பூர்த்தி செய்வதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் -எம்.ஏ.சுமந்திரன்

ஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும் பூர்த்தி செய்வதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பினர் குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்ளாது வெளியேறி இருந்த நிலையில், தாம் கூட்டத்தில் பங்குக்கொள்ளாமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள அதேவேளை, பலர் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலர் மாத்திரம் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடுவது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது காணாமால் போனோர் அனைவரது சார்பிலும் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதைவிடுத்து ஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு களமாக இதனை பயன்படுத்த முடியாது.

இதற்கு கூட்டமைப்பு இடமளிக்கவும் மாட்டாது. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்க நாமே தீர்மானித்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.