32 வருடங்களுக்கு முன் வழங்கிய அதிகாரங்களை மீளப்பெற நினைப்பது ஏற்க முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1985.03.01ம் ஆண்டு 01ம் இலக்க சுற்று நிரூபம் ஊடாக கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறுவதற்கு பாரிய நகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை தடைசெய்ய வேண்டும் எனக்கோரும் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண சபையின் 84ம் அமர்வில் சமர்ப்பித்திருக்கின்றார்.

வடமாகாண சபையின் 84ம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே முதலமைச்சர் மேற்படி பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.

இந்த பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்து முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

1985.03.01ம் ஆண்டு 01ம் இலக்க சுற்று நிரூபம் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களில் 6 தத்துவங்களை பாரிய நகர மற்றும் மேற்கத்தைய அபிவிருத்தி அமைச்சு 2017.02.01ல் இருந்து மீள பெறப்படுவதாக 2017.01.23ம் திகதிய சுற்று நிரூபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் மாகாண சபைகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை 13ம் திருத்தச்சட்டத்தின் ஊடாக கையளித்தது.

அப்போ து முன்னதாக வழங்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறமுடியாது என 13ம் திருத்தச்சட்டத்தின் 09ம் அட்டவணையில் 01ம் நிரலில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் 32 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய அதிகாரங்களை தற்போது மீள பெற நினைப்பது யதார்த்த ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முடக்குவதாகே அமையும் என்பதுடன்,

13ம் திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கப்பட்ட உள்ளூராட்சி என்னும் விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையானது அதிகாரத்தை பறிக்கும் ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றது.

எனவே இந்த உள்ளூட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீற பெறுவதற்கு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை இரத்து செய்து உள்ளூராட்சி மன்றங்க ளை சிறப்பாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மேற்கத்தைய பரிய நகர மற்றும் மேற்கத்தைய அபிவிருத்தி அமைச்சரையும், நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவரையும் கோருகிறது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்நிலையில் மேற்படி பிரேரணை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.