எங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம்! மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது!! – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன்

எங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம்! மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது!! – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்கி

“வடக்கு, கிழக்கில் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் தேவையில்லை. எங்கள் நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். சர்வதேச விசாரணையே எங்களுக்குத் தேவை. இந்த அரசிடமிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக்கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘எழுக தமிழ்’ நிகழ்வில்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உறங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை உசுப்பி உழுப்புவதே இந்த எழுக தமிழின் நோக்கம். பச்சத்தண்ணி கொண்டு முகத்தில் தெளித்தால் அவர்கள் எழும்பக்கூடும். எங்கள் நடவடிக்கைகள் பிழை என்றும், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நாங்கள் வாய் பேசாது மௌனிகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையினரின் விடயங்களுக்கு ஒத்தூதினால் எங்களுக்கு நற்சான்றுப் பத்திரம் கிடைக்கும். துணிந்து நின்று எமது பிரச்சினைகளைக் கூறினால் அது எமது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல்கள் என்று கூறுகின்றார்கள்.

ஆக மொத்தம் எமக்கு எது தேவை என்பதிலும் பார்க்க தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே எங்களுக்குத் தரப்படும் என்பதிலே குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்.

இன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள் என்றும் கூறிவிடுவார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் அமுலில் இருந்து வருகின்றது. அதில் ஒரு அம்சம் பற்றி நான் தெளிவுபடுத்துவது நன்மை பயக்கும் என நினைக்கின்றேன்.

ஒருவரைக் கொல்வது அல்லது அடித்துத் துன்புறுத்துவது எங்களது குற்றவியல் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றச் செயலாக அல்லது பயங்கரவாதச் செயலாக நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறைகள் எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை. இதனை அரசு, அரச அதிகாரிகள் பொலிஸார் இராணுவத்தினர்தான் தீர்மானிக்கின்றார்கள். இங்குதான் எம்மக்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

அரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் ஒரு சாதாரண குற்றவாளி. முன்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றங்காணப்பட்ட ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரேயானால் அவை எவ்வாறு அடையாப்படுத்தப்பட வேண்டும் என்றோ அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கலாமென்றோ சட்டத்தில் கூறப்படவில்லை.

அரசின் சாட்சிகள் ஒருவரைப் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தினால் அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றைய வழக்குகளில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அதை மட்டும் வைத்து இளைஞர்கள், யுவதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
குற்ற ஒப்புதல் கூறும் குற்றமானது உண்மையில் நடந்தேறியதா என்பதைக் கூட நீதிமன்றங்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்ள நீதிமன்றங்கள் சிரத்தை எடுப்பதுமில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் சட்டத்திலும் இல்லை. இவை என்னுடைய பலவருட நீதித்துறை சார்ந்த அனுபவங்கள். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர் ஆட்சியாளர்களின் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள்.

அன்று வெள்ளையனே வெளியேறு என்றவர்கள் வெள்ளையன் வெளியேறியதும், அவர்கள் வெள்ளையனின் பார்வையில் துரோகிகளாகவும், சிங்கள மக்களின் பார்வையில் வீரபுருஷர்களாகவும் ஆனார்கள். இப்போது எங்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் எமது சிங்கள சகோதரர்கள் எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுப்பது குற்றச் செயல் அல்ல அது தேசத்துரோகமல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கள் இராணுவத்தை வடக்கு, கிழக்கில் நிறுத்தியுள்ளோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றோம், அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையும் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கின்றோம், சர்வதேச அரசுகளின் பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம், இவ்வாறிருக்கும்போது நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள் என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் அல்லாமல் வேறு யார் என்றுதான் தொடர்ந்து வந்த அரசுகளின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.

உரிமைகள் அற்றவர்கள்தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள். எமக்கான உரிமைகள் இருந்திருந்தால் ஏன் வெய்யிலில் கருகி குளிரில் கொடுகி மழையில் நனைந்து போராட வேண்டும். அவை இல்லாதததால்தான் இந்தப் போராட்டம். இதளை சிங்கள சகோதர, சகோதரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல் யாப்பு அனுசரணைகளுடனும் உரிமை மறுப்பைச் சாதித்து வந்துள்ளார்கள்.

சர்வதேச பிரசன்னம், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள் என எவருடைய பிரசன்னங்களும் இல்லாது இறுதிப்போர் சர்வதேசப் போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை சிங்கள மக்கள் உட்பட முழு உலகுமே அறியும். இறுதி யுத்தத்திலே விடுதலைப் புலிகள் மட்டுமல்ல சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எந்தவித மனச்சாட்சியும் இல்லாது மிகச் சொற்ப தொகையாக திரிவுபடுத்தப்பட்டு சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டப்பட்டது.

இதனால் விளைந்ததுதான் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை முன்மொழிவு. இதனை சர்வதேசமும் இலங்கை அரசும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டன. இருந்த போதிலும் இலங்கை அரசு ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் ஒன்றும் செய்யவில்லை.

கேப்பாப்பிலவில் காடடர்ந்த நிலங்களை ஏக்கர் ஏக்கராக கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர் படையினர்.
அவற்றிலே மக்களின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியமர்வதற்கு முப்படையினரும் தடையாக உள்ளார்கள். இதனை மக்கள் எதிர்த்தால் துன்புறுத்தப்படுகின்றார்கள்.
ஏன் இப்படி என்று கேட்டால் அது பாதுகாப்பு ஏற்பாடு என்கின்றார்கள். யாரின் பாதுகாப்புக்காக இந்த அடாவடித்தனம்? எங்கள் பாதுகாப்பா, உங்கள் பாதுகாப்பா அல்லது அரசியல்வாதிகளின் பாதுகாப்பா என்று கேட்டால் அதற்குப் பதிலில்லை.

எங்களுக்கு உங்கள் பாதுகாப்புத் தேவையில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். போதிய பொலிஸார் இருக்கின்றனர்; பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பாக இருக்கின்றார்கள் என்று கூறினால் முப்படையினர் செவிசாய்க்கின்றார்கள் இல்லை.

அவர்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளின் விஸ்தீரணங்களைப் பார்த்தால் இன்னும் 500 அல்லது 600 வருடங்களுக்கு அவர்கள் அங்கு நிலைகொண்டிருக்கப்போகின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த இரண்டு வருட காலத்தில் ஒருதுரும்புகூட நகர்த்தாத அரசு, வருகின்ற மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே கூறியது போன்று இன்னும் இரண்டு வருடம் கால அவகாசத்தைக் கேட்டவிருக்கின்றது. இந்த அரசால் நிச்சயமாக எதனையும் செய்ய முடியாது. எங்களுக்குத் தேவை சர்வதேச விசாரணையே தவிர இந்த அரசிடமிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக் கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் எங்களது தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.