சிலரின் அரசியல் நலன்களை பூர்த்தி செய்வதற்கு துணைபோக மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன்

ஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும் பூர்த்தி செய்வதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பினர் குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்ளாது வெளியேறி இருந்த நிலையில், தாம் கூட்டத்தில் பங்குக்கொள்ளாமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள அதேவேளை, பலர் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலர் மாத்திரம் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றால், தாம் இதில் பங்கேற்கப் போவதில்லை என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்த நிலையில் கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.