3 தடவைகள் என்னை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ;பொலிஸார் எழுத்து மூலம் தகவல்- சுமந்திரன்

கொலை செய்வதற்கான முன்னெடுப்பு செய்யப்பட்டு அது கைகூடாத வகையில் முன்னாள் போராளிகள் என சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.; 3 தடவைகள் என்னை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று கிளிநொச்சி நீதவானுக்கு பொலிஸார் எழுத்து மூலம் தகவல் கொடுத்தாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாரினால் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெட்டத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. என்னைக் கொள்வதற்கே முயற்சி செய்தார்கள் என அதற்கான வழக்கிலக்கம் 85/17 ஆகும் .

இந்த நிலையில் அவ்வாறு சொல்லப்படவில்லை என உண்மைக்கு புறம்பான தகவலை ஏன் கூறுகின்றார் என்பதனை முதலமைச்சரிடம்தான் நீங்கள் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் அது சார்பில் நான் பதில் உரைக்க முடியாது.

என்னை கொல்வதற்கு வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் அறிவித்தல் வந்திருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர். அதற்கான சான்றாக அவர்களின் கணக்கிலக்கங்கள் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசிகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு மன்றினால் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

அவை நிரூபிக்கப்படும் வரை மேலதிகமாக என்னால் எவையும் கூறமுடியாது. இருப்பினும் சட்டத்தின் பார்வையில் தற்போது அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் அல்ல.அதே நேரம் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் முன்னாள் புலிகள் என்பதற்காக 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் குற்றம் சொல்ல வேண்டிய தேவையில்லை.

ஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டால் அது யாராக இருப்பினும் சட்டத்தின் நடவடிக்கை தொடரும். கவனமாக இருக்க வேண்டும். உண்மை செய்திகளை திரிவு படுத்துகிறவர்களுக்கு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

என்னை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது என்பது தொடர்பில் அது பொய்யானது என்று சந்தேகிக்க இடம் இல்லை ஏனெனில் பொலிஸாரால் குறிப்பிட்டுள்ள தகவலும் அன்றைய காலத்தில் என்னுடைய செயற்பாடுகளும் ஒத்துவருவதால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எனக்கு அசௌகரியமான சூழைலை உருவாகியுள்ளது. மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை. இந்த பாதுகாப்பை நானே விரும்பவில்லை ஆனால் தற்போது இப்பாதுகாப்பு அத்தியாவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.