யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள், கஞ்சா கடத்தல்கள் போன்றன மீண்டும் தலைதூக்கியுள்ளன. வடக்கு மாகாண சபை இயங்கினாலும் இந்த விடயத்தில் சட்டம் சம்பந்தமான அதிகாரிகள் குறிப்பாக பொலிஸார் இதில் அக்கறை செலுத்தவேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது பொலிஸார் ரோந்து நடவடிகைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் வரவேற்கத்தக்கது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, அவற்றை மேலும் தொடரவிடாது கட்டுப்படுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.