‘தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கலப்பில்லை’

“தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது,

“பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் ரீதியான முன்னோக்குகள் மற்றும் தேவைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில், இப்போதும் மக்களுடைய இயக்கமாகத் தான் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் செய்துகொண்டு போவது, அரசியல் கலப்படமற்ற அல்லது அரசியலோடு சம்பந்தப்படாத மக்கள் இயக்கமாகும்” என, அவர் மேலும் கூறினார்