அரசின் வாக்குறுதி காற்றில்! இராணுவ ஆட்சி வடக்கில்!! – சிவமோகன் எம்.பி. குற்றச்சாட்டு

புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளும் மீளப் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் மற்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நில மீட்புப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்களூடாகச் சிந்திக்கும்போது இந்த மண்ணில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றதா? என எண்ணத் தோன்றுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், ஆட்சியாளர்கள் எடுக்கும் எந்த முடிவுகளையும் இராணுவம் ஏற்கவில்லை எனவும், இராணுவ அதிகாரம்தான் அரசியலில் செயற்படுத்தபடுகின்றது எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

காணி அதிகாரம் என்பது 13ஆவது திருத்தம் மூலம் வடக்கு மாகாண சபைக்குள்ளது என வெளியுலகுக்கு அரசு தெரிவித்துவரும் நியைில் இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கு மாகாண சபையின் அதிகாரம் பூஜ்ஜியம் என்பது தெளிவுபடுத்தபட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.