மக்களின் தேவைக்காக செயற்படும் மக்கள் பேரவை! விக்னேஸ்வரன்

அரசியல் கட்சிகள் லாபம் பெறுவதற்காக பல கருத்துக்களை கூற முடியும். ஆனால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கலப்பற்ற மக்கள் தேவைக்காக செயற்படும் என வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பேரவை அரசியல்கட்சியாக செயற்படுமென்ற தொனியில் பேசியிருக்கின்றார்கள்.

அத்துடன், கிழக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி கூட்டத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என அண்மையில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கட்சிக்கு அரசியல் ரீதியான முன்நோக்குகள் இருக்ககூடும். ஆனால், தமிழ் மக்கள் பேரவையினைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளுக்காகவே செயற்பட்டு வருகின்றோம்.

அரசியல் செய்பவர்கள் இதிலிருந்து என்ன லாபம் பெற முடியுமென நினைக்ககூடும். அரசியல் கலப்பற்ற அரசியலுடன் சம்பந்தப்படாத மக்கள் இயக்கமாக செயற்பட்டு வருகின்றோம்.

அந்த கருத்துக்கள் அனைத்தும் எனக்கு முன்பாக வரும் போது அதைப்பற்றி பேசிக்கொள்வேன்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி அவ்வாறு கூறியது தவறில்லை. எழுக தமிழ் பேரணி மேடையில் பெண் ஒருவர் இல்லாதது குறை தான் அடுத்த செயற்பாடுகளின் போது அவை நிவர்த்தி செய்யப்படும்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியின் போது, பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டியிருந்தார்கள்.

பலரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் குண்டுகள் வீசப்படுமென கூறும் போது பெண்களுக்கு பயம் ஏற்படும். ஆந்த நிலமைகள் காணப்பட்டன.

அந்தவகையில், எதிர்காலத்தில் பெண் பிரதிநிதித்துவம் பற்றி கலந்துரையாடி துணிச்சல் மிக்க பெண்களை இணைத்துக்கொள்வோம் என்றார்.