யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பெரும்பான்மையிடம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் – ஈ.சரவணபவன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முக்கிய பீடங்களுக்கு தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படும் வீதம் குறைவடைந்து செல்கின்றது. எங்களது பல்கலைக்கழகத்தை பெரும்பான்மையினருக்கு நாங்களே தாரைவார்க்கும் நிலை ஏற்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கோண்டாவில், மக்கள் நலன்பேணும் அமைப்பின் அலுவலகத் திறப்பு விழாவும், தையல் பயிற்சி நிலைய ஆரம்ப நிகழ்வும் நேற்று இடம் பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய இளைஞர்கள் கல்வியிலும், தொழில்துறையிலும் முன்பு காட்டிய அக்கறையைக் காண்பிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்ற மனநிலைதான் அவர்களிடம் வளர்ந்து செல்கின்றது. இது கல்வி மீதான ஈர்ப்பைக்குறைத்து விடுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. கலைப்பீடத்துக்கு மாத்திரமே தமிழ் மாணவர்கள் செல்கின்ற நிலை உருவாகி வருகின்றது. விஞ்ஞான, வணிக பீடங்கள் உள்ளிட்ட ஏனைய பீடங்களை சிங்கள மாணவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்கின்றது. எமது பாரம்பரியம், சொத்து, அடையாளமாக

இருக்கின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பெரும்பான்மையிடம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் இயல்பாகவே எழுகின்றது.

இது சாதாரண விடயம் அல்ல. எங்கள் கல்விப் புலத்தினர் கண்கொத்திப் பாம்பாக இதனை அவதானிக்க வேண்டும். நாங்கள் கல்வி நிலையில் மீண்டும் உயர் நிலைக்கு வரவேண்டும். எங்கள் பல்கலைக்கழகத்தை எங்களது மாணவர்கள் நிரப்ப வேண்டும்.

பொருளாதாரம், கல்வி இரண்டிலும் தமிழன் தலைநிமிர்ந்து, கடந்த காலத்தைப் போன்று மேம்பட்டு வாழ அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சரவணபவன் கூறினார்.