இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றது என சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழர்களுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு இல்லை. உரிமைகளுக்காக நடுத்தெருவில் போராடுகின்றபோதும் பாராமுகமான நிலையே உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின்கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது சொந்த நிலங்களை கேப்பாபுலவு மக்கள் 22 நாளாகவும் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குகொண்டுவர்ப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்குறுதியை வழங்கியும் தற்போது வரையில் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் புதுக்குடியிருப்பு மக்களும் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அப்போராட்டமும் தொடர்ந்தவண்ணமேயுள்ளது. கிளிநொச்சி நகரத்தின் இதயமாவிருக்கும் பரவிப்பாஞ்சான் மக்களும் தமது நிலத்தை விடுவிக்க கோரி போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இவ்வாறு தாம் பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில் மீண்டும் சென்று வாழ்க்கையைத் தொடருவதற்கான கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராடிக்கொண்டிருக்கின்ற போதும் அவர்களுக்கு தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் வீதியிலேயே உணவருந்துகின்றார்கள். உறங்குகின்றார்கள். பாரிய நெருக்கடிக்குள் இருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் இந்த விடயத்தில் தற்போதுவரையில் அரசாங்கம் பாராமுகமாகவிருப்பது ஏன்? இந்தப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? சொந்த இடங்களுக்கு செல்லும் உரிமை மக்களுக்கு இல்லையா? இதுதான் இந்த நாட்டில் சம உரிமையா?

இவ்வாறு தமிழ் மக்கள் தற்போதும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும், கைதாகிக்கொண்டிருக்கும் நிலைமையில் தான் அவுஸ்திரேலியாவிற்குச் சென்ற பிரதமர் அங்கு சட்டவிரோதமாகவுள்ள தமிழர்களை நாடு திரும்புமாறு அழைப்புவிடுக்கின்றார். இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு உள்ளதாகவும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

இது முற்றுமுழுதான பொய்யாகும். இங்கு தமிழ் மக்கள் நடுத்தெருவில் தங்யிருந்து போராடுகின்றார்கள். எவ்விதமான பாதுகாப்பும் இங்கு இல்லை. நிலைமை இப்படித்தான் இருக்கின்றது. பிரதமர் அனைத்து உண்மைகளையும் மறைத்து கூட்டமைப்பை சாட்சியாக வைத்து பொய்யுரைக்கின்றார்.

தற்போது காணமல்போனவர்களின் உறவினர்களும் தமது உறவுகளை கண்டறிந்து தருமாறு போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் தமது சொந்தங்களை கைகளாலே இராணுவத்தினரிடத்தில் ஒப்படைத்திருக்கின்றார்கள். நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளன. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தொடர்ந்தும் கால அவகாசத்தையே அரசாங்கம் கோரிக்கொண்டிருக்கின்றது. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும். அதனை எப்போது வழங்குவார்கள்?

இப்படியான நிலைமையில் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கால அவகாசம் வழங்குவது குறித்து பேசப்படுகின்றது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதை நாம் எதிர்க்கின்றோம். அவ்வாறு வழங்கப்படக்கூடாது என பரப்புரை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.