வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது? மக்களுக்கு வழங்கப்படும் உரிமை இதுதானா?

கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொடர்பான மூன்று சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரித்துக் கொள்வதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கேப்பாப்புலவு மக்கள் வீதியிலிருந்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அரசாங்கம் ஏன் இன்னமும் அவர்களுக்கு தீர்வொன்றை வழங்கவில்லை என்றும் வினவினார்.

“கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 42 ஏக்கர் பரப்பு காணிக்காக 56 சிறுவர்களும், 13 முதியவர்களும் உள்ளடங்கலாக 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் பற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு தெரியப்படுத்தினோம். எனினும், அவ்விருவரும் இன்று, நாளை என, நாட்களை இழுத்தடித்து கடத்திகொண்டிருக்கின்றனரே தவிர, தீர்வெதுவும் வழங்கப்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு போராடிக் கொண்டா இருக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் உரிமை இதுதானா?” என்றும் கேட்டார்.

தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இதனை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் கூறியிருந்தார். மக்கள், காணிக்காக போராடிவரும் சூழ்நிலையில் அரசாங்கத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு பொய்யான தகவலைக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு, பரவிபாய்ஞ்சான் என பல இடங்களில் பொது மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி தீர்வொன்றை உடனடியாக வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.