அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.- இரா. சம்பந்தன்

அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த அரசைப் போன்றே இந்த அரசும் தம்மைக் கொடுமைப்படுத்துகின்றது என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காது. எனவே, இனியாவது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
போர்க்குற்றமிழைத்த படையினருக்கு எதிராகத் தண்டனை அவசியம் என்று வலியுறுத்திய அவர், கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினை சம்பந்தமாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துரைத்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றைக் கொண்டுவந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுக்கு அரசமைப்பில் ரீதியில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நம்பிக்கை ஏற்பட்டது. புதிய அரசு மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அரசுக்கு ஒத்துழைப்புகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதில் எமது கௌரவமும் எமது பிரதேசத்தில் நாமே எமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தப் பிரச்சினையால் கடந்த காலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதுகாப்புப் படையினரும் எமது போராளிகளும் ஏனைய சிவில் மக்களும் உயிரிழந்துள்ளனர்.
காணிப் பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள், உண்மை மற்றும் நல்லிணக்கம், இழப்பீடு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் மீள்நிகழாமை என்பன மாற்று நிலை நீதியின் அடிப்படை விடயங்களாக உள்ளன. இவற்றுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.
எனினும், மேற்படி விடயங்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளால் எமது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த அரசைப் போன்று இந்த அரசும் தம்மைக் கொடுமைப்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர்.
மேற்படி பிரச்சினைகளை முன்னைய அரசைப் போன்றே இந்த அரசும் கையாண்டு வருவதாக மக்கள் நம்புகின்றனர்.
ஒட்டுமொத்த படையினரும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று கூறவில்லை. உயர்மட்டங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் அவர்கள் செயற்பட்டிருக்கலாம். படையினர் சிலர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை போன்ற தனிப்பட்ட ரீதியிலான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவைப் பற்றி தகுந்த விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும்.
ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது மனம்பேரி என்ற இளம்பெண் ஒருவர் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆகவே, அவ்வாறு தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும்.
அத்துடன், படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மனக்கசப்பும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். டி.எஸ். சேனாநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் படைத் தளபதிகளாக தமிழர்கள் இருந்திருக்கின்றனர். ஆகவே, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் படையில் அங்கம் வகிக்க வேண்டும்” – என்றார்.