மக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் – இரா. சம்பந்தன்.

மக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் என்று நாடாளுமன்றில் நேற்று கடும் விசனம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.
சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சியின் உறுப்பினர்கள், அதைவிடவும் நான்கு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற சுமந்திரனை துரோகி என்கின்றனர். மக்களுக்காக சுமந்திரன் காத்திரமான சேவையை வழங்கி வருகின்றார். அதை நாம் பாராட்டவேண்டும்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமது குறைபாடுகளை மறைப்பதற்கே சுமந்திரனை துரோகி என்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு மத்தியிலேயே அரசியல் நடத்தவேண்டியுள்ளது என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ளவேண்டும்.
அத்துடன், சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்றார்.