இலங்கையைக் கண்காணிக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் அவசியம்! – ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது கூட்டமைப்பு

“ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் திறப்பதே தீர்வாக அமைய முடியும். அவ்வாறு திறப்பது கடினமானதுமல்ல. இதனை நான் ஜெனிவாவில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்புகளில் வலியுறுத்தியுள்ளேன்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதாக இணங்கி நிறைவேற்றிய தீர்மானத்தையே இன்னும் செயல்படுத்தாத சந்தர்ப்பத்தில் அடுத்த ஐ.நா. அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு இடம்பெறும் காலம் இலங்கை அரசு கோரிய கால அவகாசங்கள் அனைத்தும் நிறைவடையும் காலம்.
இந்தக் காலப் பகுதியில் பிரிட்டன் அரசால் இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை ஐ.நாவில் கொண்டு வருவதற்கான முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகப் பல விடயங்களை நகர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் நான் கடந்த வாரம் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனிவாவுக்குச் சென்றிருந்தேன்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் அலுவலத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டு எதிர்வரும் அமர்வில் ஆணையாளரின் அறிக்கையில் கண்டிப்பாக இறுக்கான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் எனக் கோரினேன். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 12 நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து தற்போதுள்ள நிலைமைகள் தெரியப்படுத்தப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டே நிறைவேற்றியபோதும்கூட இன்றுவரை எதுவுமே இடம்பெறாத நிலையில் அடுத்த அமர்வு இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசு கோரிய 18 மாத காலத்தின் முன்னேற்றத்தைக் காண்பிக்காத நிலமையில் மேலும் கால அவகாசத்தைக் கோருவதை ஏற்கமுடியாது. எனவே, உடனடியாகத் தீர்க்கக் கூடிய விடயங்களான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் அலுவலகச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி அடுத்தகட்ட நீதி விசாரணை, சட்ட உருவாக்கம் போன்றவற்றுக்கும் ஆணையாளரின் நேரடி அலுவலகக் கண்காணிப்பில் முன்னெடுக்க கூடியதான மேற்பார்வையுடன் கூடிய மிக இறுக்கமான நடைமுறையே வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதனை மிக இலகுவாக ஐ.நாவால் நடைமுறைப்படுத்த முடியும். அதற்காகவே வடக்கு, கிழக்கில் ஐ.நா. ஆணையாளரின் அலுவலகத்தை திறந்து நேரடிக் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவது ஐ.நாவைப் பொறுத்தமட்டில் கடினமான காரியம் அல்ல. இதனை நான் ஜெனிவாவில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்புகளில் வலியுறுத்தியுள்ளேன்” – என்றார்.