தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்றுக் காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் சீனா, மற்றும் இந்தியாவின் ஆர்வம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, இரா.சம்பந்தன், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடு செய்யவில்லை என்றும், அரசியலமைப்பு மறுசீரமைப்பில் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகவும் பதிலளித்தார் என்று, சந்திப்பில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் அமெரிக்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும் போதும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தனர் என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.