மட்டு. துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: நாடாளுமன்றில் கடும் கண்டனம்! – உடனடி நடவடிக்கைக்கு கூட்டமைப்பு வலியுறுத்து

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் வெளியிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காணி அமைச்சரிடமும், சபாநாயகரிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
“சட்டம் உரிய வகையில் செயற்படாதன் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது” என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் காணி எடுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் ஆரம்பமானது.
இவ்விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் மேற்படி சம்பவத்தை கடுமையாகக் கண்டித்தனர். பிரதி அமைச்சர் அமீர் அலியும் கண்டம் வெளியிட்டார்.
“துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இது பற்றி விசாரணை அவசியம். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அதிகாரி சிறப்பாகச் செயற்படக்கூடியவர். நில அபகரிப்பின்போது களத்தில் நின்று செயற்பட்டவர். இறுக்கமாகச் செயற்படக்கூடியவர்” என்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி சுட்டிக்காட்டினர்.
“அரசுக்குச் சொந்தமான காணியொன்றில் மட்டக்களப்பில் மக்கள் சிலர் குடியேறியுள்ளனர். இதற்கு அனுமதிக்கமுடியாது. இதற்கு எதிராக குறித்த அதிகாரி நடவடிக்கை எடுத்தார். பொலிஸில் முறைப்பாடு செய்தார். எனினும், நீதிமன்றத்திலிருந்து நீதியான தீர்ப்பொன்று வரவில்லை. சட்டம் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்காது” என்று காணி அமைச்சர் தெரிவித்தார்.