வடக்கில் இராணுவ ஆட்சி: அரசாங்கம் அதனை ஆமோதித்து செயற்படுகிறது! சிவமோகன் எம்.பி

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் மக்கள் தாமாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வன்னியின் தற்போதைய நிலமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் அவர்கள் வழங்கிய தகவல்களே இவை

கேள்வி: வடபகுதியில் காணிவிடுவிப்பு தொடர்பாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான உங்களது கருத்து என்ன..?

பதில்: நிச்சயமாக 2009இற்கு பிறகு வன்னிப் பிரதேச மக்கள் செட்டிகுளம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின்னர் மீள்குடியேற்றப்பட்டனர். இதன்போது வன்னியின் முல்லைத்தீவு பிரதேச மக்களின் பெருமளவிலான காணிகளை இராணுவம் சுவீகரித்து தம்வசப்படுத்தி இருந்தார்கள். இது இரண்டு நாட்டுக்கிடையிலான யுத்தமில்லை. ஒரு உள்நாட்டுப் போர். விடுதலைப் புலிகள் யுத்தத்தை இடைநிறுத்தி பின்வாங்கிய பின்னர் இராணுவம் ஊடுருவி பொதுமக்களின் காணிகளை பறித்து இருப்பதென்பது எந்தச் சட்டத்திற்குள்ளும் அடங்காத ஒன்று. எமது இலங்கையின் அரசியல் யாப்பு அடிப்படையில் கூட இந்த இராணுவம் செய்வது ஒரு அநீதியான செயல். அரசியல் யாப்பு அடிப்படையில் அவர்கள் காணிகளை சுவீகரிப்பதானால் அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அந்த நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படாது மக்களின் காணிகளை கையகப்படுத்தி இருப்பது என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இந்த அரசு இராணுவத்தின் செயற்பாடுகளை ஆமோதித்து செயற்படுமானால் அவர்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும். வடக்கில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் இராணுவத்திடம் இருந்து தமது காணிகளை விடுவிக்க மக்கள் போராடுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கேள்வி: தற்போதைய மக்கள் போராட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தாத தன்மை காணப்படுகின்றது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?

பதில்: நிச்சயமாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதற்கான ஆதரவுகளை நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை வெளிப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனெனில் இதனை ஒரு அரசியல் ரீதியில் நடத்தப்படும் ஒரு எதிர்பாக காட்டப்பட்டு அந்த மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: ஆட்சி மாற்றத்தின் பின்னும் தமிழ் மக்களது பல பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இதனால் புதிய அரசாங்கம் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்

பதில்: தற்போது எந்த அரசு ஆட்சியில் இருக்கின்றது என்பது முக்கியமில்லை. மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் மீதான தங்களது அடக்குமுறையை காட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஐ.நா சபையில் அவர்கள் காலக்கெடு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் காலக்கெடு கேட்பதற்கு முன்னர் வன்னிப் பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையிடம் அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசத்தை கோர இருக்கிறது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி பார்க்கிறது..?

பதில்: இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் கருத்து வழங்கியிருந்தார். நேரடியாக ஐ.நா சபையின் மேற்பார்வையின் கீழ் தான் இந்த நடவடிக்கை எடுக்கபட வேண்டுமே தவிர, மற்றும்படி ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார். அதேநேரம் வடமகாண சபை முதலமைச்சர் அவர்கள் இரண்டு வருட காலக்கெடு பொருத்தமற்றது எனவும் மிகவும் குறுகிய காலத்திற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதற்குரிய மேற்பார்வையை ஐ.நா செய்ய வேண்டும். எனவும் தெரிவித்திருந்தார். ஐ.நா மேற்பார்வை செய்வதாக இருந்தால் முதலாவதாக இந்த காணிகளை விடுவிக்க வேண்டும்.

கேள்வி: மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன..

பதில்: பாராளுமன்றத்தில் காணி விடுவிப்பு சம்மந்தமாக கூட ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் எங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றோம். இங்கு இருக்கும் பிரச்சனை அதுவல்ல. தாராளமான அழுத்தங்கள் அரசியல் தலைவர்களால் வழங்கப்படுகிறது. அவ்வாறான அழுத்தங்களை கொடுக்க வேண்டிய தேவை சகல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இருக்கிறது. இன்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படாத கட்சித் தலைவர்களுக்கு கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்களின் பொறுப்பு அளவுக்கு தெரிவு செய்யப்படாத கட்சித் தலைவர்களுக்கும் உண்டு. இந்த விடயத்தை தமது சுயநல அரசியலுக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாவிக்க முற்படக் கூடாது என்பது எனது கருத்து. அதேசமயம் எவ்வளவு தூரம் தான் அந்த அழுத்தங்களை வழங்கினாலும் இராணுவத்தின் கருத்துக்களுக்கு தான் இந்த சிங்கள அரசுகள் தலைசாய்த்து வருகின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

கேள்வி: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் மத்திய அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகள்மற்றும் மாகாணசபை என்பவற்றின் கருத்துக்களைப் பெறாது செயற்படுவதாக கூறப்படுகிறது. இதனை எப்படி கருதுகிறீர்கள்?

பதில்: வடபகுதியில் உள்ள அபிவிருத்தி அனைத்தும் பாராளுமன்றத்திலும் தெரியப்படுத்தப்பட்டு தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விடயத்தில் வடமாகாண சபையுடனும் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து உள்ளது. அதேசமயம் வடமாகாணத்தில் உள்ள எமது அரசியல்வாதிகள் பக்கத்தில் ஒற்றுமை இல்லாமல் அந்த அபிவிருத்திகளை தமது சுயநலத்திற்காக பாவிக்க முற்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

கேள்வி: வடமாகாணசபை 3 வருடங்களை கடந்து பயணிக்கிறது. அதன் உறுப்பினராகவும் இருந்தவர் என்ற வகையில் அதன் செயற்பாடுகள் தற்போது எப்படி உள்ளது?

பதில்: வடமாகாணசபை அவர்களது அதிகார வரம்பின் அடிப்படையில் செயற்படுவது மிகவும் கஸ்ரமான ஒரு செயற்பாடு. உதாரணமாக காணி விடயத்தை எடுத்துக் கொண்டால் அவை நேரடியாக முதலமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். இந்தக் காணிகளை இராணுவம் சுவீகரிப்பது என்றால் முதலில் முதலமைச்சரின் அனுமதியைப் பெறவேண்டும். அப்படி அவர்கள் காணி சுவீகரிப்புச் சட்டம் 38 கீழ் செயற்படுகின்ற போது அப்படி செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு வர்த்தமானியை பிரசுரித்து 38ஏ என்பதன் கீழ் நேரடியாக மத்திய காணி அமைச்சரால் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த காணி விடயம் ஒன்றை வைத்து பார்க்கும் போது எல்லோருக்கும் தெரியும் இந்த மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என்பது. இப்படியான நிலையில் தான் மாகாண சபை செயற்படுகிறது

கேள்வி: முல்லைத்தீவு மாவட்டம் ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அதன் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் என்ற வகையில் அங்கு இது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா?

பதில்: நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இந்த மாவட்ட இணைப்புக் குழுவில் சகல கட்சிகளையும் சேர்ந்த நான்கு பேர் இணைத்தலைவர்களாக உள்ளனர். முக்கியமாக வடமாகாணத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் இருக்கின்றனர். இந்த இணைப்புக் குழுவில் நாம் வட்டுவாகல் மற்றும் புதுக்குடியிருப்பில் தற்போது மக்கள் போராடும் பொதுமக்களின் காணிகள் என்பவற்றை விடுவிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளோம். இந்தக் காணிகளை எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கு விட்டுத்தர முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி இருந்தும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பின்னரும் அதனை சுவீகரிப்பதற்குரிய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்றால் எப்படி இந்தப் பிரச்சனையை அணுகுவது என்பது தெரியவில்லை. மாவட்ட இணைப்புக் குழுக்கள் ஜனாதிபதியின் பணிப்பேரில் உருவாக்கப்பட்டது. அதை மதிக்காத இந்த இராணுவத்தின் நடவடிக்கைகள் இராணுவ மேலாட்சியைப் புலப்படுத்துவதாக தான் அமைந்திருக்கின்றது

கேள்வி: புதிய அரசியலமைப்பு தொடர்பில் கால இழுத்தடிப்புக்கள் நடைபெறுகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகள் அதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நீங்கள் எப்படி பார்கிறீர்கள்?

பதில்: நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு உருப்படியான அறிக்கை, வரைபு இதுவரை வரவில்லை. அது சமர்ப்பிக்கப்படும் வரை அது பற்றி கூற முடியாது எனத் தெரிவித்தார்.