மார்ச் 4ஆம் நாளுக்குள் பிலவுக் குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு!

பிலவுக் குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சனைக்கு எதிர்வரும் 4ஆம் நாளுக்குள், தான் யாழ்ப்பாணம் பயணம் செய்வதற்கு முன் தீர்வு காணுமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் நேற்று மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், நாம் இன்று மாலை 5.00 மணியளவில் பிலவுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை நடத்தினோம்.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மாத்திரமே அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவார்கள். ஆகவே இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டுமெனத் தெரிவித்தோம்.

அதற்கு அவர், அரசாங்கத்தை பொறுத்தவரை இதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை இந்தக்காணிகளை நாங்கள் மக்களுக்கு திருப்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயார். புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும்.

அத்துடன் பிலவுக் குடியிருப்பு மக்களின் காணிகள் மக்கள் விரும்பினால் தமது பழைய இடத்தில் இருக்க அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு வேறு இடத்தில் காணிகளும், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருக்க விரும்பினாலும் அவர்களுக்கு ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படும்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இராணுவத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து இந்தப் பிரச்சனைக்கு இரண்டொரு நாளில் தீர்வு காணப்படவேண்டுமென மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.