ஆயுதப் படையினர் வசமுள்ள வலி.வடக்கு, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்குக!

“வடக்கில் பொதுமக்களின் காணிகள் பலவற்றில் ஆயுதப் படையினர் இன்னமும் நிலைகொண்டுள்ளனர். அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் உள்ள காணிகளையும் படையினரிடமிருந்து பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குங்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-
“வடக்கு மாகாணத்தில் ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள் தயைகூர்ந்த கவனத்தி கொண்டுவர விரும்புகின்றேன். இக்காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்காக கூடிய விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.
(1) யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள்
(2) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் உள்ள காணிகள்
இக்காணிகளில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கின்றனர். இக்காணிகளுக்கு உரிமையாளர்களாகிய குடிமக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அக்காணிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலே 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்குக் காணியில் 25 வருடங்களுக்கு மேலாக தரைப்படையினர் இருந்து வருகின்றனர். பாரிய தாக்குதல் ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து வந்த காலத்தில், அவர்கள் ஆயுதப் படைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் இக்காணிகளில் ஆயுதப்படையினர் நிலைகொண்டிருந்தனர். இத்தகைய நிலைமை பல வருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது.
இக்காணிகள் பல பரம்பரை காலமாக குடிமக்களால் அவர்களது குடியிருப்புக்காகவும், விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
குடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை. இக்காணிகளை விடுவிப்பதாக அரசு உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள இந்தக் காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கான மிக விரைவான செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
மேலே (2) குறிப்பிடப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு காணிகளிலும் கூட 8 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் நிலைகொண்டு தங்கியுள்ளனர். இக்காணிகளும் அதற்கு உரிமையாளர்களாகிய குடிமக்களால் குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும். இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமைக்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இருக்க முடியாது.
எனவே, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்பிலவு காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளக் கையளிப்பதற்குத் தேவையான செயற்பாடுகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
குடிமக்களுக்குச் சொந்தமான இக்காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது, நாட்டின் சட்டங்களை மீறுகின்ற செயலாகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இத்தகைய நிலைமை தொடரக் கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் கையளிக்கப்படுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குமாறு தங்களை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” – என்றுள்ளது.