இணையத்தளங்கள் ஊடாக கூட்டமைப்புக்கு அவதூறாக இராணுவப் புலனாய்வாளர்கள் பரப்புரை! – மாவை எம்.பி. குற்றச்சாட்டு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, எங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதற்காக – பொய்ப் பரப்புரை மேற்கொள்வதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணையத்தளத்தை இயக்குகின்றனர்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருக்கமானவன் நான். கடந்த காலங்களில் அவரின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள், இன்று எம்மைப் பற்றி பொய்ப் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எமக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகவே இணையத்தளம் வைத்து நடத்துகின்றனர். பொய்களைப் பரப்புகின்றனர். அதற்கு சில பத்திரிகைகளும் துணைபோகின்றன” – என்றார்.