ஐ.நாவில் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று கூறுவது முட்டாள்தனம்!

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். இது எமக்குத் தெரியாது. கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கும் தெரியாது. கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கூறுவது முட்டாள்தனமானது. இலங்கை அரசும், தான் ஒப்புக் கொண்ட விடயங்களை நிறைவேற்றாமல் முடிக்கத்தான் முயற்சிக்கின்றது. அதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இலங்கையை நேரடியாக சர்வதேச நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல முடியாது. பாதுகாப்புச் சபையின் ஊடாக இந்த விடயத்தை நகர்த்த முற்பட்டால், பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் வீட்டோ அதிகாரமுடைய சீனா, ரஷ்யா, அமெரிக்கா இதனைத் தடுத்துவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
சமஷ்டியைக் கைவிடவில்லை
நாம் சமஷ்டியைக் கைவிடவில்லை. தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவோம். தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றோம். ஆயுதப் போராட்ட காலத்தில், 2005ஆம் ஆண்டு சமஷ்டித் தீர்வு தட்டில் வைத்துத் தரப்பட்டது. அப்போது வேண்டாம் என்றோம். இப்போது அந்தத் தீர்வுக்காகப் பேசுகின்றோம். இங்கே சிலர் நாம் சமஷ்டியைக் கைவிட்டு விட்டதாகப் பொய்ப் பரப்புரை செய்கின்றனர்.
ஒற்றையாட்சி
சொற்பதம்
இருக்கக்கூடாது
சில விடயங்களில் நாங்கள் விட்டுக் கொடுப்புக்களைச் செய்வது உண்மைதான். ஒற்றையாட்சிக்குரிய தாய் நாடுதான் பிரிட்டன். அங்கே இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறைமை, சமஷ்டி நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு இருக்கின்றது. தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. ஸ்பெயின் அரசமைப்பு ஒற்றையாட்சியைக் கொண்டது. ஆனால், நடப்பது கூட்டாட்சி. சொல் முக்கியமல்ல. அதன் பொருள் கோடல்தான் முக்கியம்.
சமஷ்டிக்கு இரண்டு முக்கிய விளக்கங்கள் இருக்கின்றன. வழங்கிய அதிகாரங்கள் திரும்பப் பெறக் கூடாது. எதிலும் நடுவண் அரசு தலையீடு செய்யக்கூடாது. இந்த இரண்டு அம்சங்களும் அரசமைப்பில் இருக்க வேண்டும். அவ்வாறான அரசமைப்பு வருவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. சொல் முக்கியமில்லை என்றாலும், ஒற்றையாட்சி என்ற சொல் பதம் இருக்கக்கூடாது.
வடக்கு – கிழக்கு
இணைப்புக்கு
காலம் தேவை
வடக்கு – கிழக்கு இணைப்பை நாம் கைவிடவில்லை. நாம் இதனைக் கைவிட்டு விட்டதாகப் பொய்யான பரப்புரை முன்னெடுக்கின்றனர். இது உடனடியாகச் சாத்தியமில்லை. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களும் இணங்க வேண்டும். தமிழ் – முஸ்லிம் இரண்டு பக்கமும் இன்னமும் சந்தேகம் இருக்கின்றது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட காயங்கள் ஆற வேண்டும். அதன் பின்னர் இரண்டு தரப்பும் பேச்சு நடத்தி இதனை இணைத்துக்கொள்ளலாம்.
கிழக்கு மாகாண சபையில் எமது கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் இருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இணைந்து ஆட்சி நடத்துகின்றோம். நாங்கள் விட்டுக் கொடுத்து எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
இலங்கை – இந்திய உடன்படிக்கையிலும் வடக்கு – கிழக்கு இணைப்பு இருந்தது. ஆனால், அதற்கு நிபந்தனை இருந்தது. எல்லாம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம் என்றால் நாம் தோல்வியைத்தான் அடையவேண்டும். இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர் எங்களைச் சந்தித்தபோது, வடக்கு – கிழக்கு இணைப்புச் சாத்தியமில்லை என்று சொல்லவில்லை. அது பேச்சு மேசையில் இருக்கட்டும். முதலில் பெற்றுக்கொள்ளக்கூடியதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார். ஆனால், இந்த விடயங்களில் குழப்பம் யாருக்குத் தேவையாக இருக்கின்றதோ, அவர்கள் இதனைக் குழப்பியடிக்கும் வகையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபை
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கால அவகாசம் இலங்கைக்கு வழங்கக் கூடாது என்று எமது கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். இது எமக்குத் தெரியாது. கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கும் தெரியாது. கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கூறுவது முட்டாள்தனமானது. இலங்கை அரசும், தான் ஒப்புக் கொண்ட விடயங்களை நிறைவேற்றாமல் முடிக்கத்தான் முயற்சிக்கின்றது. அதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
ஐ.நா.வில் நாம் கால அவகாசம் கோரியதாகப் பொய்யான பரப்புரை செய்கின்றனர். இலங்கை அரசுதான் கால அவகாசம் கேட்கின்றது. இலங்கை அரசுதான் இணங்கிய விடயங்களை நிறைவேற்ற வேண்டும்.
அவர்களைத் தப்பிக்க விடக்கூடாது. கடும் கண்காணிப்பில் – மேற்பார்வையில் கால அட்டவணை கொடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு நாம் தெளிவாகச் சொல்லியுள்ளோம்.
இலங்கை ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நேரடியாக நிறுத்த முடியாது. ஐ.நா. பாதுகாப்புச் சபையினூடாக இந்த விடயத்தை அணுகினால், வீட்டோ அதிகாரத்தை வைத்துள்ள நாடுகள் இதனை நீர்த்துப் போகச் செய்து விடுவார்கள். சர்வதேச நீதிமன்றில் கடந்த 30 வருடத்தில் 3 பேர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோபத்துக்காக மூக்கை
அறுக்கக்கூடாது
நாங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்வோம். தீமையான எதையும் செய்ய மாட்டோம். சில விடயங்கள் சிலருக்கு கசப்பாக இருக்கும். இனி ஒரு தடவை நாங்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது. அந்த அறிவு எமக்கு வேண்டாம். அதற்காக ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்தில் உன்னதமாகத் தியாகம் செய்தார்கள். அதனை மதிக்கின்இறோம். இனியும் ஒரு லட்சம் இளைஞர்களைக் காவுகொடுக்க முடிஇயாது. எமது இளைஞர்கள் வாழ வேண்டும். காலம் தாழ்த்தியாவது எமது மக்களுக்கு விடிவு கிடைக்கும். மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம். எமது கோரிக்கை நியாயாமானது. திரும்பவும் குருதிக் களரி தேவையில்லை. கோபம் வந்து விட்டதற்காக எமது மூக்கை வெட்டக் கூடாது. சிந்தித்து அறிவாற்றலுடன் செயற்பட்டு எமது மக்கள் உரிமையை வென்றெடுப்போம் – என்றார்.