தமிழ் இளைஞர்களைக் காணாமல் ஆக்கிய கட்சியே இப்போது போராட்டம் நடத்துகின்றது!

“காணாமற்போனோருக்காக வவுனியாவில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். அந்தக் கட்சியினர்தான் கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் பலரைக் காணாமல் ஆக்கியிருந்தார்கள்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் பான் – கீ – மூன் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாண பொதுநூலகத்தில் சந்திப்பு நடந்தது. பொது நூலகத்தின் முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் சம்மந்தா, சுமந்திரா எங்கே போனீர்கள் என்று ஒப்பாரி வைத்துப் போராட்டம் நடத்தினர். இதன்போது எனது அருகில் நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், எங்களது பெயரைச் சொல்லிக் கத்தினால் நியாயம் இருக்கு. சம்மந்தமில்லாத உங்களுடைய பெயரைச் சொல்லிக் கத்துகின்றார்கள் என்றார்.
வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் பார்த்தேன். அந்தக் கட்சியினர்தான் கடந்த காலங்களில் இளையோர்களைக் கடத்திச் சென்றவர்கள்” – என்றார்.