எதிர்க்கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை!

மக்களுடைய காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொது மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்பொருட்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால் பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த பிரேரணையில்,

தனியாருக்கு சொந்தமான பாரியளவிலான காணிகள் மே 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இக்காணிகளில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொது மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக, ஆட்டிலறி தாக்குதலிலிருந்து பலாலி விமானத் தளத்தை பாதுகாக்கும் நோக்கில் வலிகாமம் வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இருந்த மக்கள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக வெளியேற்றப்பட்டார்கள்.

ஆனால் 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும், ஒரு சில பகுதிகள் மாத்திரமே பொது மக்களின் மீள் குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெரும்பகுதி காணிகளின் உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்களிலும் தங்க வைத்திருக்கும் குடும்பங்களின் இடங்களிலும் வாடிக்கொண்டிருக்க, படையினர் இந்தக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றில் உல்லாச விடுதிகளை நடாத்துவது உட்பட பயிர்ச்செய்கை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வன்னியிலும் கூட இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினர் வசமுள்ளது. அண்மையில் கேப்பாப்புலவில் விமானப் படையினரால் சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், மேலும் பல காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன.

தங்களை மீண்டும் இந்த காணிகளில் குடியமர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி இந்த காணிகளுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். மக்கள் இரண்டு வருடம் பொறுமை காத்ததோடு, இப்போது நியாயபூர்வமாக, அரசாங்கமானது தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறார்கள்.

யுத்தத்திற்கு முன்னர் பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள இக்காணிகளை அவைகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீள கையளிக்கும்படிக்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.