பிரித்தானியாவின் பிரேரணையில், சர்வதேச நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பு என்பன அவசியமில்லை என்ற சரத்தை உள்ளடக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற உற்பத்திவரி ( விசேடஏற்பாடுகள்) சட்டத்தின்கீழான பிரேரணைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம். ஆனாலும் இலங்கைக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதற்கு சில வல்லரசு நாடுகளும், குறிப்பிட்ட சில அமைப்புகளும் துணைபோவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட இருக்கும் அறிக்கையில் இலங்கைக்கான கால அவகாசம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன்மூலம் மேற்குலகம் தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், படையினரை ஒருபோதுமே தண்டிக்கவிடமாட்டேன். அத்துடன் சர்வதேச நீதிபதிகளையும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.