30

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை தாமதமுமின்றி மீளக் கையளிக்க வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

யுத்தத்துக்கு முன்னர், பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீளக் கையளிப்பதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புப் பிரேரணையொன்று, இன்று நாடாளுமன்ற அமர்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்படவுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கும், ஊடக அறிக்கையொன்று, அக்கட்சியினால், வெளியிடப்பட்டது. அதில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“தனியாருக்குச் சொந்தமான பாரியளவிலான காணிகள், 2009 மே மாதத்தில், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இக்காணிகளில் பெரும்பான்மையானவை, பாதுகாப்புத் தேவைகளுக்காக பொது மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக, ஆட்லெறி தாக்குதலிலிருந்து பலாலி விமானத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், வலிகாமம் வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இருந்த மக்கள், சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னரும், ஒரு சில பகுதிகள் மாத்திரமே பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பெரும்பகுதி காணிகளின் உரிமையாளர்கள், நலன்புரி நிலையங்களிலும் தங்க வைத்திருக்கும் குடும்பங்களின் இடங்களிலும் வாடிக்கொண்டிருக்க, படையினர் இந்தக் காணிகளை ஆக்கிரமித்து, அவற்றில் உல்லாச விடுதிகளை நடத்துவது உட்பட, பயிர்ச்செய்கை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் . வன்னியிலும் கூட இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினர் வசமுள்ளன. அண்மையில், கேப்பாபுலவில் விமானப் படையினரால் சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், மேலும் பல காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன. தங்களை மீண்டும் இந்தக் காணிகளில் குடியமர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, இந்தக் காணிகளுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
இது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். மக்கள் இரண்டு வருடம் பொறுமை காத்ததோடு, இப்போது நியாயபூர்வமாக, அரசாங்கமானது தனது வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். யுத்தத்திற்கு முன்னர் பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள இக்காணிகளை அவைகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீளக் கையளிக்கும்படிக்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.