இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க முடியாது- சம்பந்தன்

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை இரு வருட கால அவகாசம் கோரியுள்ள நிலையில், குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயமான காணி விடுவிப்புக்கு இரண்டு வருடங்கள் பொறுமை காக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்-

”எமது மக்களின் பூர்வீகக் காணிகளை படையினர் ஆக்கிரமித்திருப்பதற்கு தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் நெருக்கடிக்குள் வாழ்கின்றனர்.

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் படையினர் அந்த நிலங்களில் தோட்டங்களையும் பொழுதுபோக்கு இடங்களையும் வியாபாரத்தையும் செய்கின்றனர். அந்த நிலத்துக்குச் சொந்தமான மக்கள் வீதியில் இருக்கின்றார்கள். இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுவது எந்த வகையில் நியாயமானதாகும்? ஆகவே, அவர்கள் அந்த நிலங்களை மீளவும் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்றார்.