எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர் சக்திகள்: சிறீதரன் எம்.பி

எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர்சக்திளும் தான் எனவே சர்வதேச அணுகுமுறைகளைப் பகைத்து அவர்களுடைய சில அனுசரிப்பு ஒழுங்குகளை எங்களுடைய அரசியல் வியூகங்களாக மாற்றி நாங்கள் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தின் அமைந்துள்ள ஆலங்கேணி, சாமிப்புலம், முக்கொம்பன், நேரடம்பன் ஆகிய கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்து அவர்களின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியபோது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இவ்வேளையில் வெளியே குழப்பகரமான அரசியல் கருத்துக்கள் பகிரப்படுவதையும் மக்களிடையே ஒருவித அரசியல் சஞ்சலநிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

கூட்டமைப்பு உடைந்துவிடுமா? ஜெனீவாவில் கால அவகாசம் வழங்கப்படுமா? கொள்கைகளை கைவிட்டு விட்டார்களா? நாங்கள் ஏமாற்றப்படுகிறோமா? சம்பந்தன் போகும் பாதை சரிதானா? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.

சாதாரண பொதுமக்கள் மிகத்தெளிவோடு இருக்கிறார்கள். ஆனால் ஓரிரு ஊடகங்களும் ஒருசில அரசியல் தலைவர்களும் மக்களுக்கு தெளிவற்ற கதையினை கூறமுனைகிறார்கள். இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் ஒத்துக்கொண்டவற்றில் இதுவரை ஒன்றையும் செய்யவில்லை.

இனிமேலும் செய்யுமென்று நாங்கள் நம்புகின்ற நிலை கிடையாது. ஆனால் ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தை அரசியல்கட்சி என்ற வகையில் நாங்கள் கொண்டுவர முடியாது.

ஆனால் இங்கு நடந்தவற்றை புரிந்து கொண்ட அமெரிக்கா மற்றும் உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை அமெரிக்கா வரை அழைத்துப்பேசி 2011 இல் அமெரிக்காவே தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையையும் பெற்று பரிந்துரைகளை முன்வைத்தனர். பரிந்துரைகள் பல கடப்பாடுகளை இலங்கை அரசு மீது சுமத்தியுள்ளது.

இப்போது தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகளே விசனம் அடைந்துள்ள சூழல் காணப்படுகிறது. அதனால் தான் அவர்கள் கால அவகாசம் ஒன்றை காலஅட்டவணை நிமித்தம் வழங்க உள்ளதாக தெரிகிறது.

அத்துடன் அண்மையில் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் மனித உரிமை ஆணையக பரிந்துரைகளை புறந்தள்ளினால் குற்றவியல் நீதிகோர வேண்டிய தேவை ஏற்படும் என எச்சரிக்கை மிகுந்த தொனியிலே செய்தி வெளிவந்திருக்கின்றது.

அவ்வாறு சர்வதேச நீதித்துறையின் தேவை எழுகிறபோது ஒருபலம் மிக்க நாடொன்றின் மூலமே வழக்குத் தொடுப்பு மேற்கொள்ள முடியும். தலைவர் பிரபாகரன் களத்தில் நின்ற போது பேச்சுவார்த்தைகளில் தோல்விகள் நிகழ்ந்தால் களத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டன.

இன்று எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர்சக்திளும் தான் எனவே சர்வதேச அணுகுமுறைகளைப் பகைத்து அவர்களுடைய சில அனுசரிப்பு ஒழுங்குகளை எங்களுடைய அரசியல் வியூகங்களாக மாற்றி நாங்கள் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.

அதற்காக கொள்கைகளை கைவிட்டு விட்டோமென்று விசமப்பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது. கூர்மதி கொண்ட எமது தலைமைகள் பொது எதிரிக்கு எதிராக போராடவேண்டுமே தவிர தமிழ் மக்களின் பலமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தர்ப்பவாதத்திற்காக சிதைக்க முனையக்கூடாது.

நாங்கள் மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கும் அவர்களின் அபிலாசைகளுக்கும் ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம். அவ்வாறு துரோகம் இழைக்க யார் முற்பட்டாலும் காலத்தண்டணைக்கு உட்படுவோம் என்பது எல்லோருக்கும் தெரியும் என சிறீதரன் தெரிவித்தார்.