எம் மக்கள் நோயோடு போராடும் நிலைமை வருத்தமளிக்கின்றது – சிறிதரன் எம் .பி

போரோடும் ,இயற்கையோடும் ,போராடிய எம் மக்கள் இப்போது நோயோடும் போராடவேண்டிய பெரும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது .கடந்த ஒருசில மாதமாக நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது .

வடக்கில் புதியவகை வைரஸ் காச்சல் ஒன்று மக்களை மிக கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்ப்படுத்துவது மக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் இழப்பையும் ஏற்ப்படுத்துகிறது .

கிழக்கு மாகாணத்தில் ஏற்ப்படும் மக்களின்,சிறுவர்களின் உயிரிழப்புக்கள் ,வடக்கில் ஏற்ப்படும் நோய் பாதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக யாரவது பார்த்துக்கொள்ளட்டும் என்ற போக்கில் விட்டுவிடாமல் தனிமனிதராக ஒவ்வொருவரும் இணைந்து நோய்த்தாகத்தினை ஏற்ப்படுத்தும் மூல காரணியை உற்பத்தியாக்கும் இடங்களை அழித்து தூய்மைப்படுத்தி ,செயற்ப்படாவிட்டால் நோய்தொற்றின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது சுலபமல்ல.

உலகளவில் தனிமனித சுகாதாரம் முதற்கொண்டு ஒரு சமூகத்தின் சுற்று சூழல் சுகாதாரம்வரை சரியாக பேணப்படாவிட்டால் இப்படியான சில தவிர்க்கமுடியாத சம்பவங்களுக்கு எல்லோரும் முகம்கொடுக்கவேண்டியது நிதர்சனமாகின்றது .

எனவேதான் மக்கள் தங்கள் பகுதிகளை தூய்மைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை மட்டுமல்ல இனிவரும் காலங்களில் எந்தவித நோய்த்தாக்கத்திற்க்கும் நாம் ஆளாகாமல் பார்த்துக்கொள்ள முடியும் .இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3821 ஆகவுள்ளது .திருகோணமலையில் 2088 ஆகவும் ,மட்டக்களப்பில் 900 ஆகவும், அம்பாறையில் 833 அகவும் கணக்கிடப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் டெங்கின் தாக்கம் அந்தளவிற்கு இல்லை என்றபோதும் புதியவகை வைரஸ் தொற்று அதிகளவில் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது .

குறிப்பாக இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை மக்களின் பல மட்டங்களுக்கும் கொண்டுசெல்லவேண்டிய கடமை எமது சமூகத்தின் சகலரையும் சாரும்போதும் சிறப்பாக ,சிறுவர்கள் ,பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு நாளாந்தம் நாம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்போது கண்டிப்பாக நோய் பற்றிய விழிப்புணர்வையும் ,தெளிவையும் ஏற்ப்படுத்தமுடியும் ,சனசமூக நிலையங்கள் ,சமூக சேவை அமைப்புக்கள் ,மக்கள் நலன்பேணும் சகல பொது அமைப்புக்களும் கண்டிப்பாக இந்த விழிப்புணர்வுக்கு ஆதரவாக குரல்கொடுத்து மக்கள் மத்தியில் தெளிவையும் ,பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் ஏற்ப்படுத்தவேண்டும் .

பாடசாலைகளில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் மாணவர்களுக்கு நோய் பற்றியும் ,நோய்காவி பற்றியும் ,பாதுகாப்பு முறைகள் பற்றியும் தெளிவான ,சரியான அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்கவேண்டும் .

ஒரு சராசரி மனிதன் தன் வீட்டை மட்டுமல்லாமல் சுற்று சூழலையும் சரியாக பராமரிக்கும் பட்சத்தில்தான் ஒரு சமூகம் நோயற்ற வாழ்வை வாழமுடியும் என்பதை மக்கள் தம் கடமையாக உணர்ந்து உரிய காலத்தில் உரிய முறையிலான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தவாறது ,இந்த நெருக்கடியான நோய்த்தாக்க காலத்தினையும் கடக்கவேண்டும் .