இளைஞர் – யுவதிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு செல்ல கூடாது – ஞா.ஸ்ரீநேசன்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்காமல் இன்னும் ஒரு விரக்தி நிலைக்கு கொண்டு சென்று, மீண்டும் விபரீதமான பாதைக்கு செல்வதை அனுமதிக்க முடியாது.

அத்தோடு இளைஞர் – யுவதிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு செல்ல கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வாகரை குகசேனபுரம் மக்களின் குறைகளை கேட்டறியும் மக்கள் சந்திப்பு சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று மாலை நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தம் காரணமாக உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள, மக்களின் மனக் காயங்களை ஆற்றக்கூடிய செயற்பாடுகள் எதுவும் இல்லை.

குறிப்பாக பிரதமர் ஒரு கருத்தையும் ஜனாதிபதி ஒரு கருத்தையும் கூறுகின்றனர். காணாமல் போனவர்கள் ஒன்று இறந்திருக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்க வேண்டும் என பிரதமர் கூறியிருந்தார்.

நாங்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை. அப்படியானால் பிரதமரா தங்களுடைய பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பியது என தாய், தந்தையர்கள் வேதனையோடு தெரிவிக்கின்கின்றார்கள்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று, தங்களுடைய பிள்ளைகளை இழந்து நிற்கும் மக்களின் மனங்களை மேலும் காயப்படுத்தும் விதத்தில் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் செயற்படக் கூடாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் மக்களாக காணப்படுகின்றார்கள். காணாமல் போனவர்கள் வருவார்கள், கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், காணிகள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

தொழில் வாய்ப்புக்கள், முப்பது வருடம் மறுக்கப்பட்ட அபிவிருத்திகள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். பட்டதாரிகளின் தங்களுடைய பட்டத்திற்கு ஏற்ற தொழில்களை கோருகின்றார்கள்.

எனவே இவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இளைஞர், யுவதிகளை புறக்கணிக்கின்ற நாட்டினால் முன்னேற முடியாது.

மனித வளங்களை வினயமாக்கின்ற போக்கு இருக்க கூடாது. மனித வளங்களை சரியாக பயன்படுத்திய நாடுகள் தான் இன்று வளர்ச்சியடைந்து இருக்கின்றது. மேற்குலக நாடுகள் மனித வளங்களை பயன்படுத்தி மான்புற்று விளங்குகின்றது.

ஆனால் இலங்கை போன்ற நாடுகள் மதவாதம், இனவாதம் என்றெல்லாம் ஏற்படுத்தி மனித வளங்களை கூறு போட்டு வைத்திருக்கின்ற படியாலும், புத்தி ஜீவிகள் நாட்டை விட்டு ஓடுகின்ற நிலமை, வெளிநாடுகளுக்கு சென்று எங்களுடைய உழைப்புகளை வழங்கக் கூடிய மக்கள் காணப்படுகின்றார்கள்.

எனவே இனிமேலாவது அரசு தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் மட்டுமல்ல வேலையில்லாமல் இருக்கின்ற படித்தவர்களுக்கும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரச துறைகளில் தொழில் வாய்ப்பு வழங்காமல் விட்டாலும் வட கிழக்கில் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும்.

கடந்த காலங்களில் ஐயாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கிய வாழைச்சேனை கடதாசி ஆலை இழுத்து மூடப்பட்ட நிலையில் எவருக்கும் தொழில் வாய்ப்பு அற்ற நிலையில் காணப்படுகின்றது.

அதுபோன்று ஓட்டுத் தொழிற்சாலை, அரிசி ஆலைகள், விவசாய பண்ணைகள், அரச அச்சகங்கள் போன்றவை இழுத்து மூடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போன்று வடக்கு கிழக்கிலும் காணப்படுகின்றது.

இந்த தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலமான கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கக் கூடிய நிலை உள்ளது.

இன்னும் இன்னும் இளைஞர்களை ஒரு விரக்தி நிலைக்கு கொண்டு சென்று, மீண்டும் விபரீதமான பாதைக்கு செல்வதை அனுமதிக்க கூடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் நிபந்தனைகளின் ஒன்றாக இருக்கும் மீண்டும் ஒரு வன்முறை யுகத்தை உருவாக்கக் கூடாது, இளைஞர் யுவதிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது. அவர்களின் மனங்களை வெல்ல கூடிய நிவைமை வேண்டும்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு இவைகளை வழங்காவிட்டால் மக்கள் விரக்தி அடைவார்கள். அரசுக்கு எதிரான ஒரு போராட்டமாகவும், ஒரு புரட்சியாகவும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பட்டதாரிகள் தெருவில் இருப்பதை அரசு சிந்திக்காமல் இருக்க முடியாது. ஏனெனில் அவர்களின் வாக்குகளில் வந்த அரசாங்கம் தேவைக்கு அப்பால் வேலிக்கு வெளியில் வீசுவது போல் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.