மக்களை ஏமாற்றியது போன்று சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை போன்று சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 23ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பில் இன்று (சனிக்கிழமை) யாழில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டி சூழல் ஏற்பட்டது.

எனவே மஹிந்தவிற்கு நேர்ந்த கதியை மனதில் கொண்டேனும் இந்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஐ.நா.விற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்” என்றும் குறிப்பிட்டார்.