மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்

“சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டுப் பின்னர் போக்குக் காட்டிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்த கதியை இந்த அரசு நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை மனதிலிருத்தியாவது சரியாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைப் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாது விடுவதைப் போன்று சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதுவிட முடியாது.
இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம். 2009ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையியையும் கைவிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அதே வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாத காரணத்தால்தான் ஆட்சி விலக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்தாகிலும், இன்றைய அரசு சரியான முறையில் செயற்படவேண்டும். நாட்டின் நன்மைக்காக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தமது வாக்காளர்களுக்கு இனிமையைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகச் சில கருத்துக்களைச் சொன்னாலும் கூட நடைமுறையில் சில விடயங்களை நிறைவேற்றாவிடின், பெரிய பின்விளைவுகள் ஏற்படும்.
நீதிமன்றப் பொறிமுறை உருவாக்குவதற்கு முன்னர் பல விடயங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக்கப்பட வேண்டும்.
அதன்பின்னர், நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இவை குறித்து அதிகமாக பேச வேண்டிய தேவை இல்லை. எமது நிலைப்பாடு உறுதியானது. சட்டத்திலும் எமது நிலைப்பாடு உறுதியானது” – என்றார்.