இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவித்தால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பட கட்டடத் தொகுதிகளை விடுவித்தால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறந்த அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் சிதைக்கப்பட்ட திட்டங்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்டம் தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை பெருமையளிப்பதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான தமிழ்ப் பெயரரையும் பாவனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.