தீர்மானத்தை நிறைவேற்ற தவறின் ஐ.நாவே பொறுப்பு : சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அமைக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்களான மங்கள சமரவீரவும், லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா அரசாங்கம் சொல்வதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிக்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா அரசின் அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தமையினால்தான் வவுனியாவில் நாம் கடந்த வாரம் அவசர கூட்டத்தை நடத்தினோம். அதில் நாம் எடுத்த முடிவில் மாற்றமில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் இதற்கு ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை கிடைக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையே நடவடிக்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதுவே எமது முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.