இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு- நாடாளுமன்றில் காரசார விவாதம்!

இறுதிப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் இடம்பெற்றது. இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தை முன்னெடுத்திருப்பார்கள் எனக் கூறினார்.

சிறிதரன் எம்.பி.உரையாற்றிய போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், காணாமல் போனவர்கள் இறந்துவி ட்டனர் என்பதை ஏற்க உறவினர் விரும்பவில்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார். யுத்தத்தின் போது இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, இனச்சுத்திகரிப்பை அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறுவது தவறானது. அவ்வாறான தேவை அரசாங்கத்துக்கு இல்லை. நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாத அமைப்பொன்று செயற்படும்போது யார் ஜனாதிபதியாக இருந்தாலும் யுத்தம் செய்திருப்பார். இவ்வாறான நிலையில் யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி தென்பகுதி சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லைக் கிராமங்களிலுள்ள பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாடசாலை பஸ்களுக்கு குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன, ரயில்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி நீங்கள் பேசுவதில்லை என்றார்.

அது மாத்திரமன்றி அப்பாவி தமிழ் இளைஞர்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் கொல்லப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பற்றி பேசாது சகித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என, சிறிதரன் எம்.பியைப் பார்த்து அமைச்சர் கூறினார். நடந்தது நடந்துவிட்டது இதிலிருந்து மீண்டு எப்படி ஒற்றுமையாக வாழ்வது என்பதைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

யுத்தத்தால் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அது பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனப் பதிலளித்த சிறிதரன் எம்.பி. நடந்தது நடந்துவிட்டது எனக் கூறி நீதி கிடைப்பதற்கான வழியை மூடப்பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.

பிரதமர், நீதி அமைச்சர் என சகலரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ள சூழ்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவேதான் சர்வதேச அங்கீகாரத்துடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். சர்வதேசத்தின் மேற்பார்வை மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்துடன் கூடிய நீதி இல்லாதவரை பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்காது என்றார்.