சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்தாசைகளையும் நாம் வரவேற்கிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முகமாக 2015ம் ஆண்டின் 30/1 பிரேரணையை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும்.

ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 , பிரேரணையை வரவேற்கிறது.

மேலும், இந்த 34/1 பிரேரணையில், இலங்கை அரசாங்கத்திற்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமை பேரவையில், 30/1 பிரேரணையின் வெற்றிகரமான அமுலாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கொடுத்துள்ள காலவரையறையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வரவேற்கிறது.

எனவே, இந்த பிரேரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் எனவும், இந்த பிரேரணைகளைளின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும் அரசாங்கமானது காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரின் குடும்பங்களின் அங்கலாய்ப்புகள், மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களில், இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்து விட்டார்கள். எனவே இந்த விடயங்கள் தொடர்பிலான அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகிறோம்.

மேற்குறித்த விடயங்களை அடைந்து கொள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்தாசைகளையும் நாம் வரவேற்கிறோம்.

தமிழ் பேசும் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் இலங்கையில் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான ஐ.நா.வின் பரிந்துரை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் செயலாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவதிலும் கண்காணிப்பதிலும் ஆக்கபூர்வமாக செயற்படும் என்பதனையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இந்த பிரேரணையின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதி செய்யும்படிக்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள், மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன எடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு